Ratings1
Average rating4
"மணிக்கொடி" இலக்கியப் பாரம்பரியம் தமிழுக்குத் தந்த மாபெரும் ஆகிருதிகளில் ஒருவர் லா.ச.ராமாமிருதம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட பிறகு, இன்றும் அவரது படைப்புகள் புத்தம் புதியதாக வாசகர்களைக் கவர்கின்றன. அவர் கட்டமைக்கும் மாய உலகம் புதிய வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. அவரது படைப்புகள் தரும் வாழ்க்கை தரிசனங்களும் சொற்கள் இணைவின் தாலயமும் மொழியின் கவித்துவ அனுபவமும் அவர்களை வசீகரிக்கின்றன. லா.ச.ரா.வின் பிரசித்தமான நாவல்களில் ஒன்று "அபிதா". க.நா.சு. தொடங்கி இன்றைய விமரிசகர்கள் வரை அனைவரின் சிறந்த தமிழ் நாவல்கள் பட்டியலிலும் தவறாமல் இடம்பெறும் படைப்பு.வாழ்வின் பல வண்ணங்கள் கலந்த ஒரு ஓவியம் "அபிதா". ஆன்மிகம், அதீத அனுபவம், பாலியல், காதல் அனைத்தையும் உள்ளடக்கிய உணர்வுகளின் வடிகாலாக திகழ்கிறது இந்நாவல். இதன் அதீத அனுபவங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட, சராசரி மனிதர்களுக்கு ஏற்படாத அனுபவங்களாகத் தோன்றும். ஆனால், எந்த ஒருவருக்கும் எந்த நேரத்திலும் எந்த விஷயத்திலும் அகப்புலன்களின் வழியே உய்த்துணரப்படும் மெய்யனுவமே அபிதா என்பதை ஆழமான வாசிப்பில் உணர முடியும். "அபிதா" தரும் பரவச அனுபவம் முற்றிலும் புதுமையானது. எந்த இஸத்துக்குள்ளும் அடங்காத தத்துவ தரிசனம், சொல்லைத் துறந்து தன் சுயத்தில் இயங்கும் ஆன்மீகம், நாவல் முழுக்க இழையோடும் உறவின் கவிதா சோகம் மீண்டும் மீண்டும் படிக்கப் படிக்க "அபிதா" புது முகம் காட்டும். இசையைக் கேட்பது போல், ஓவியங்களைப் பார்ப்பது போல், லா.ச.ராவைப் படிப்பதும் படிப்பதில் இழைவதுமே ஒரு அனுபவம். அந்த அனுபவமே "அபிதா"வின் பலம்.
Reviews with the most likes.
There are no reviews for this book. Add yours and it'll show up right here!